×

நரியம்பட்டு அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 5 குழந்தைகளுக்கு சிகிச்சை-அழைத்து சென்ற ஆம்புலன்ஸ் பழுதானதால் பரபரப்பு

ஆம்பூர் : ஆம்பூர் அருகே நரியம்பட்டு அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 5 குழந்தைகளுக்கு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தைகளை அழைத்துச்சென்ற ஆம்புலன்சும் பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நரியம்பட்டில் இயங்கி வரும் அங்கன்வாடியில் 25 குழந்தைகள் கற்று வருகின்றனர். அங்கன்வாடி ஆசிரியராக சுஜிபிரியா மற்றும் சமையலராக நந்தினி ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். நேற்று மதியம் 5 குழந்தைகளுக்கு சமையலர் நந்தினி உணவு வழங்கியுள்ளார். இதில் ஒரு குழந்தையின் பாட்டி உணவை டிபன் பாக்ஸில் பெற்றுக் கொண்டு வீட்டிற்கு சென்று குழந்தைக்கு  உணவு ஊட்டியுள்ளார்.

அப்போது வழங்கப்பட்ட லெமன் சாதத்தில் பல்லி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, அந்த உணவை கொண்டு சென்று அங்கன்வாடியில் காட்டி உள்ளார். அவர்கள் அந்த உணவை பெற்றுக் கொண்டு அருகில் உள்ள ஒரு இடத்தில் கொட்டியுள்ளனர். அதற்குள், பரமசிவம் மகன் ராம்பிரசாத் (4), ராம்பிரசாத்தின் அக்காள் வைசாலினி (6), முத்துவேல் மகள் தீபிகா (4), சீனிவாசன் மகன் நந்திஷ் (4), வெங்கடேசன் மகள் தீபிகா (4) ஆகியோர் சோர்வடைந்தனர்.

உடனே, அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி சிகிச்சை பெற்றனர். பின்னர், ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது ஆம்புலன்ஸ் பழுதடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், 5 குழந்தைகளுக்கு அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு குழந்தைகள் வார்டில் சேர்க்கப்பட்டனர்.

இதுபற்றி தகவலறிந்த மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா, எம்.எல்.ஏ.க்கள் வில்வநாதன், அமலு ஆகியோர் அங்கன்வாடியில் ஆய்வு செய்தனர். பின்னர், மருத்துவமனையில் குழந்தைகளை சந்தித்து நலம் விசாரித்தனர். உடன் ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வராசு, மருத்துவ அலுவலர் ஷர்மிளா ஆகியோர் இருந்தனர்.

டயர் வெடித்ததால் வழியில் நின்ற ஆம்புலன்ஸ்

நரியம்பட்டில் இருந்து ஆம்பூர் அரசு  மருத்துவமனைக்கு சென்ற ஆம்புலன்ஸ் நேதாஜி ரோட்டில் வந்தபோது திடீரென டயர் வெடித்தது. இதனால், குழந்தைகளை அவர்களது பெற்றோர், உறவினர் ஆகியோர் கைகளில் தூக்கி வந்து சிகிச்சைக்காக சேர்த்தனர். அவசர சிகிச்சைக்கு வரும் நிலையில் ஆம்புலன்ஸ் டயர் வெடித்து பஞ்சரானதால் பெற்றோர் அவதிக்குள்ளாகினர்.

அங்கன்வாடி கட்டிடங்கள் ஆய்வு

- கலெக்டர் தகவல் அங்கன்வாடி சம்பவம் குறித்து நிருபர்களிடம் கலெக்டர் அமர் குஷ்வாஹா பேசும்போது, ‘அங்கன்வாடி கட்டிடங்களில் விளக்குவசதி, குடிநீர், கட்டிடம் ஆகிய வசதி குறித்து மாவட்டம் முழுவதும் விவரம் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அங்கன்வாடி கட்டிடங்களை ஆய்வு செய்து உரிய வகையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட  5 பேருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.

Tags : Niramattu Ankara , Ambur: Five children were treated at the Ambur Government Hospital for eating lizard-infested food at the Nariyampattu Anganwadi near Ambur.
× RELATED புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!